Monday, April 25, 2011

ஜெயலலிதாவின் வருகைக்கு காத்திருக்கும் விஜயின் வேலாயுதம் படம்

விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா பங்கேற்பார் என்று உறுதியாகக் கூறிவருகிறார்கள்.
ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு விஜய்க்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையிலான உறவு கெட ஆரம்பித்தது.
குறிப்பாக விஜய்யின் 'காவலன்' படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, அது திமுக அரசுக்கு எதிரான விஜய்யின் கோபமாக மாறியது. இதன் விளைவு, எம்ஜிஆர் காலத்திலும் கூட திமுகவுக்கு நெருக்கமானவராக இருந்த இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ். ஏ.சந்திரசேகரன், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேர்தலில் விஜய்யின் 'மக்கள் இயக்கம்' அதிமுகவில் இணைந்து போட்டியிடக்கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்த நேரத்தில் எஸ்ஏசி இயக்கி வந்த 'சட்டப்படி குற்றம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா இந்த விழாவுக்கு வரவில்லை. "தேர்தல் பிரசாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் இன்னொரு பெரிய விழாவில் நிச்சயம் பங்கேற்பேன்" என்று உறுதி அளித்திருந்தாரார்.
இந்த நிலையில், தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் நேரடியாகக் களம் இறங்காவிட்டாலும், அவரது மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக வேலை பார்த்தது. எஸ்ஏசி தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டது. தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் பதட்டமான சூழ்நிலையில் விஜய் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விஜய் நடித்து தற்போது வெளிவர தயாராகிக் கொண்டிருக்கும் 'வேலாயுதம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்து தருவதாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உறுதி அளித்துள்ளாராம் ஜெயலலிதா. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனோ, படத்தை எந்த அரசியல் சாயமும் இல்லாமல் வெளிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். எனவே ஜெயலலிதா இந்த விழாவுக்கு 'வருவாரா இல்லையா' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...